சென்னை:திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட 5 திருக்கோயில்களில், இன்று முதல் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர் “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகுதான் திருக்கோயில்களில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஏற்கனவே 15 திருக்கோயில்களில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ராமேஸ்வரம் திருக்கோயில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதுரை கள்ளழகர் திருக்கோயில் என 5 திருக்கோயிலில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் உள்ள 20 திருக்கோயில்களிலும் வழங்கப்படும் பிரசாதத்திற்கு, ஆண்டுதோறும் 25 கோடி ரூபாய் செலவிடப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 8 திருக்கோயில்களில் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் மேலும் 3 திருக்கோயில்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பவானி அம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் ஆதிபாரசக்தி திருக்கோயில், மாசாணி அம்மன் ஆனைமலை திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் முழு நேர அன்னதானத் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். இதனால்தான் முதலமைச்சரை ’அன்னதான பிரபு’ என்று அழைக்கும் அளவிற்கு பக்தர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கோயில்களில் வழங்கப்படும் அன்னதானத்தை இந்திய உணவு தரக்கட்பாட்டு நிறுவனம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி உள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு அன்று, கோயில்களுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு , இரவு 12 மணிக்கும், அதிகாலை 6 மணிக்கும் கோயில் நடை திறக்கப்பட்டு, பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட திருக்கோயில்களை புனரமைக்கும் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுப்பது குறித்து, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, துறை சார்ந்த அதிகாரிகள் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். அங்கு 30க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். ஆருத்ரா தரிசனம் நடைபெற்ற 4 நாட்களிலும் கனக சபை மீது தரிசனம் செய்ய மறுத்திருக்கிறார்கள். நாங்கள் மோதல் வேண்டாம் என்ற வகையில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். மேலும் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர இருக்கிறோம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும் பொழுது நடந்த சம்பவங்களை நீதிபதியிடம் அறநிலையத்துறை தெரியப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்!