சென்னை: சென்னை மாநகரில் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினா உட்படப் பல்வேறு கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரைகளுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பகுதிகளை தூய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் உள்ள கடைகளில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் வகையில், இரண்டு விதமான குப்பைத்தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வைக்காத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, தூய்மை அடிப்படையில் ஒரு கடற்கரையை தேர்வு செய்து ரேங்க் வழங்கப்படுகிறது. இதில் முதலிடம் பிடிக்கும் கடற்கரையை பராமரிக்கும் துாய்மை பணியாளர்கள், அதிகாரிகள் கெளரவிக்கப்படுகின்றனர்.