சென்னை:கோயம்பேடு பகுதியில் உள்ள பிரபல ரோஹிணி திரையரங்கில் இன்று வெளியான நடிகர் சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் பார்க்க நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிலர் தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தட்டிக்கேட்ட பிறகும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தீண்டாமை காரணமாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த வீடியோவில் முறையான டிக்கெட்டுடன் திரைப்படம் பார்ப்பதற்காக காத்திருந்த நரிக்குறவ பெண்மணி ஒருவருக்கு திரையரங்குக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை பொதுமக்களில் ஒருவர் ஏன் என விளக்கம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காத திரையரங்கு ஊழியர், அவர்களை விரட்டி விடுவதிலேயே கவனம் செலுத்தினார்.
பின்னர் நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி குழந்தைகளுடன் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. டிவிட்டரில் சோனியா என்பவர் பதிவிட்டிருந்த வீடியோவை ரீட்வீட் செய்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தியேட்டர் நிர்வாகத்திற்குத் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ரோகிணி தியேட்டர் நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில்,"பத்து தல திரைப்படம் U/A சென்சார் படம் என்பதால் சட்டப்படி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது அதற்காகத் தான் அந்த சிறிய வயதுடைய குழந்தைகளுடன் இருந்த அந்த பெண்மணியை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. ஆனாலும், பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்பதற்காக அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்த்து வருகின்றனர். என்று அதற்கான வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளது.
திரையரங்கு நிர்வாகத்தின் நூதன விளக்கத்தை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்த தருமபுரி எம்.பி.யான மருத்துவர் செந்தில் குமார், இதை இட்லினு சொன்னா, சட்னி கூட நம்பாது என பதிவிட்டிருந்தார்.