சென்னை:தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரை 25 நாள்களில் இரண்டு இரட்டைக் கொலைகள் உள்பட 17 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதுவும் சில கொலைகள் கொடூரமாக நடந்துள்ளன. குறிப்பாக கடந்த மே 1ஆம் தேதி நள்ளிரவு சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் நடந்த துக்கநிகழ்வில் ஒன்றாக மது குடித்த இளைஞர்கள் சதீஷ்குமார், அருண் ஆகிய இருவரும் தினேஷ் என்பவரால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். போதையில் செல்போன் காணாமல் போனதால் கொலை நடந்துள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.
மே 2ஆம் தேதி அம்பத்தூரில் கருத்து வேறுபாடு காரணமாக நடந்த மோதலில் ஹரிஷ் பிரம்மா, அவரது மனைவியான ரஷீயா கத்துனாவை அடித்துக்கொலை செய்தார். கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மே 2ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சென்ற ராஜி என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன், ஊழியர்கள் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். உரிமையாளரின் மனைவி லோகேஸ்வரி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
மே 6ஆம் தேதி சென்னை குன்றத்தூரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தியாகராஜன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மே 7ஆம் தேதி மயிலாப்பூரில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதாவை கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த பதம்லால் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோர் சேர்ந்து அடித்துக்கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்து தப்பினர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து ஆயிரத்து 127 சவரன் தங்க நகைகள், இரண்டு வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.தப்பிய 2 பேரை ஆந்திராவில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த மே 10 ஆம் தேதி ராயபுரத்தில் திமுக பிரமுகர் சக்கரபாணி என்பவர் கொலையாகி, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக்கிடந்தது. மூன்று நாள்களுக்குப் பிறகே அவர் கொலை செய்யப்பட்டது காவல் துறையினருக்கு தெரியவந்தது. கள்ளக்காதலி தமிம்பானு, அவரது சகோதரர் வாசிம் பாஷா, ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அடையாறில் வீசப்பட்ட சக்கரபாணியின் தலையை இதுவரை காவல் துறை தேடிவருகின்றனர்.
மே11ஆம் தேதி கோயம்பேட்டில் கள்ளக்காதலியோடு பேசியதால் மதுபோதையில் கத்தியால் குத்தி சுப்பரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமச்சந்திரன் என்பவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே நாளில் சென்னை மணலியில் குடும்பத்தகராறில் தந்தை பாலசுப்பிரமணியை கொலை செய்த அவரது மகன் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மே 16ஆம் தேதி மீஞ்சூர் பகுதியில் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருந்த போது கூலிப்படையை சேர்ந்தவர்கள் சினிமா காட்சியில் வருவது போல லாரியை வைத்து, காரை இடித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதில் தொழிலபதிபர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மே 16ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் மதுபோதையில் தகராறு செய்து ஆபாசமாகப் பேசியதால் ராஜேந்திரன் என்பவரை குடும்பத்தாரே கொலை செய்தனர். இந்த வழக்கில் தற்கொலை நாடகமாடிய மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.