சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் சுகன்யா(22). இவரது தாய், தந்தையர் இறந்துவிட, சித்தப்பா வீட்டில் தனது தங்கையுடன் வளர்ந்து வந்தார். தற்போது சுகன்யாவிற்கு கோயம்புத்தூரிலிருந்து வரன் அமைந்ததால் திருமணம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவரது சித்தி, சித்தப்பா பலரிடம் உதவி நாடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து முகநூல் வாயிலாக தலைமைச்செயலக காலனி காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி பலருக்கும் உதவி செய்து வருவது தெரியவந்தது.
பின்னர் காவல் நிலையத்திற்குச் சென்று காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் சுகன்யாவின் சித்தி சுரேகா, உதவி செய்ய கேட்டதையடுத்து, அவர் உதவ முன்வந்தார்.
சுகன்யாவின் குடும்பத்தை அழைத்த காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி அரை சவரன் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, வெள்ளிக் கொலுசு, பீரோ, கட்டில், மெத்தை, மிக்சி, பட்டுப்புடவை, பாத்திரங்கள் சகிதம் ரூ. 5,000 என ரூபாய் 60 ஆயிரத்திற்கான சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கினார்.
மேலும் அப்பகுதி மாதர் சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரையும் அழைத்து தாய் வீட்டுச் சீரோடு, காவல் நிலையத்திலேயே சுகன்யாவிற்கு மஞ்சள், சந்தனம் குங்குமம் இட்டு, நலங்கு வைத்து, ஆசிர்வதித்தார். அப்போது சுகன்யா காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியைக் கட்டித் தழுவிய நிகழ்ச்சி காண்போரை நெகிழச் செய்வதாய் இருந்தது.
கல்யாண சீர்வரிசை வழங்கிய காவல் ஆய்வாளர்! இது குறித்து பேசிய சுகன்யா, 'எனக்குச் சிறுவயதில் இருந்தே பார்வைக் குறைபாடு இருந்து வந்தது. எனது பெற்றோரை இழந்து சித்தியிடம் இருந்து வந்தேன். எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், போதிய வசதி இல்லாததால் தலைமைச்செயலக காலனி காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி மேடத்திடம் உதவி கேட்டிருந்தேன். உடனடியாக அவர் 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை, 5000 ரூபாய் தொகையை வழங்கினார். எனக்கு உதவி செய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்து இயங்குமா? - முதலமைச்சர் ஆலோசனை