சென்னை: கிண்டியில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி, இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத் என்கிற ரவுடியை கிண்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையைத் தொடர்ந்து, 5 பிரிவின் கீழ் கருக்கா வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்து மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் கிண்டி போலீசார் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், நீட் தேர்வு விளக்கு வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதையடுத்து, ரவுடி கருக்கா வினோத் மீது ஏற்கனவே சென்னை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, மதுபான கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவைவில் இருப்பது தெரியவந்தது. இதனால் ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கிண்டி போலீசார் சிறையில் அடைத்தனர்.