சென்னை மண்ணடியில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு பாஜகவின் வெறுப்பு அரசியல்தான் காரணம். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்ற கருப்புச் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல், பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசியல் தலைவர்களுக்குச் வீட்டுக்காவல் நீட்டிப்பு ஆகிய மத்திய அரசின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அரசு வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத்தமிழர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என நடிகர் ரஜினி பேசியது அழகல்ல” என்றார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு அரசியல் புரிதல் இல்லை - உதயநிதி ஸ்டாலின்