தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Rain update - அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

By

Published : May 23, 2023, 1:49 PM IST

சென்னை:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கோடை மழை பெய்யத் துவங்கியது. இதனால் கோடையின் வெப்பம் சற்று தணிந்த நிலையில் மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் கோடை மழை பெய்யத் துவங்கியதை அடுத்து விவசாயப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் மியான்மரை புரட்டிப் போட்ட மோச்சா புயல் தமிழகப் பகுதியில் வளிமண்டலத்தில் இருந்த ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்றதால் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக தெரிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை பெய்யத் துவங்கி உள்ள நிலையில், மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மே23) முதல் மே 27ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 - 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் சிற்றாறு (கன்னியாகுமரி) 9 செ.மீ, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 8 செ.மீ, சிவலோகம் (கன்னியாகுமரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 6 செ.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), துறையூர் (திருச்சி) தலா 5 செ.மீ, ஆயிக்குடி (தென்காசி), கூடலூர் பஜார் (நீலகிரி), லக்கூர் (கடலூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), சிறுகுடி (திருச்சி), மங்களபுரம் (நாமக்கல்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), புலிப்பட்டி (மதுரை), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிகளில் மே 25 முதல் 27 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மே 26, 27ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிட்னியில் பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி சி.இ.ஓ.,க்களுடன் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details