சென்னை: கரோனா பரவல் குறைந்ததையடுத்து, நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகளை மார்ச் 31ஆம் தேதியுடன் முடித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளன.
மெரினா நீச்சல் குளங்கள், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறப்பு
கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட மெரினா நீச்சல் குளங்கள், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டன.
இதனால், இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த, சென்னை மெரினா நீச்சல் குளங்களை ஏப்ரல் 1ஆம் தேதி திறக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். பராமரிப்புப் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் நேற்று திறக்கப்படவில்லை. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, இன்று முதல் மெரினா நீச்சல் குளங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இதேபோல், திருவொற்றியூரில் உள்ள நீச்சல் குளத்தை, வரும் 5ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்துள்ளனர். கோடைக் காலம் என்பதால், நீச்சல் குளங்களுக்கு பொதுமக்கள் அதிகளவு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.