ரயில் பயணத்தின்போது தவறி விழுந்து பலியான கோவில்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன் மற்றும் ஆவடியை சேர்ந்த ஓட்டுனர் பிரகாசம் ஆகியோரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், இரு குடும்பத்தினருக்கும் தலா 8 லட்ச ரூபாயை 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த உத்தரவுகளில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சேவை குறைபாடுகள் குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பதில்லை என்றும், கரப்பான்பூச்சி, எலி போன்றவற்றால் பயணிகள் உடல்நலக் குறைவுக்கு ஆளாவதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறினார். மேலும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாதோரும் பயணிப்பதாகவும், ஓடும் ரயில்களில் கதவுகள் மூடப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.