சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைக்கும் வகையில் வீடுகளுக்குச் சென்று காய்கறிகளை விற்பனை செய்திட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சென்னையில் நடமாடும் காய்கறி வண்டிகளுக்கு அனுமதி நீட்டிப்பு
சென்னை: நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்கன்வாடிக்கான அனுமதி ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கை வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவதில் பெரும் உதவியாகவும், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வண்ணமாகவும் அமைந்தது. இந்நிலையில், சிறு வியாபாரிகள் வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை செய்ய வழங்கப்பட்டிருந்த அனுமதி ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், மாவட்டத்துக்குள் பயணிக்க இ- பாஸ் தேவை இல்லை என்பதாலும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்களை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே தள்ளுவண்டிகள் மூலம் பெறும் வகையில் நேரடியாக பெறுவதற்காக வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.