தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2019, 2:09 PM IST

ETV Bharat / state

பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை சினிமா பாணியில் பிடித்த துணை ஆணையர்

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துணை ஆணையர் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்துள்ளார்.

சென்னை

மெரினா கடற்கரை சாலையில் சில தினங்களாகவே இருசக்கர வாகன பந்தயம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வெறும் ரேஸ் என்பதைக் கடந்து, பணம், செல்ஃபோன், விலை உயர்ந்த பொருட்கள் என இந்த ரேஸ்களில் புழங்கும் பணத்தின் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த வண்ணம் இருந்துள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை போக்குவரத்துக் காவல் துறை, சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 29 இடங்களில் போக்குவரத்துத் துணை ஆணையர் ஸ்ரீஅபிநவ், திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணவ் சிங் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில், கடந்த இரண்டாம் தேதி முதல் தற்போது வரை பைக் ரேஸில் ஈடுபட்டது, குடிபோதையில் வாகனம் ஒட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது என இதுவரை 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆட்டோ உட்பட மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை சினிமா பாணியில் பிடித்த துணை ஆணையர்

இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இவர்களை பார்த்தவுடன் தப்பியோட முயன்ற இளைஞர்களை போக்குவரத்துத் துணை ஆணையர் ஸ்ரீஅபிநவ் தனது காரிலேயே விரட்டிச் சென்று பிடித்துள்ளார். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அருண்குமாருக்கு தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 21 பேரை கைது செய்து 10 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர், அவர்கள் அனைவரும் 18 வயதிற்கு கீழானவர்கள் என்பதால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details