சென்னை: அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்று சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாரிமுனை ரூட் மாணவர்கள் செனாய் நகரிலிருந்து ஊர்வலமாக கோஷமிட்டபடியே வந்து கல்லூரியில் உள்ள பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது திருத்தணி ரயில் ரூட் மாணவர்களுக்கும், பிராட்வே ரூட் மாணவர்களுக்கும் இடையே மாலையிடுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ரூட்டு தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்!
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட ரூட் தல பிரச்சனையால் இரு தரப்பினர் நடுசாலையில் மோதிக் கொண்டனர்.
பின்னர் பூந்தமல்லி மற்றும் திருத்தணி ரூட் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு, சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களை கொண்டு மாறிமாறி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மாணவர் ஆனந்த் உள்ளிட்ட 3க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க சென்ற போது, போலீசாரை கண்டதும் நாலாபுறமாக மாணவர்கள் சிதறி ஓடினர். 3 மாணவர்களை மட்டுமே போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர்ச்சியாக மாணவர்கள் மோதி கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாணவர்கள் பாட்டிலை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு மோதல் சம்பவம் நடந்துள்ளது.