தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் வழியில் பொறியியல் பாடப்பிரிவு நிறுத்தம்! அதிர்ச்சி அளித்த அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்ட மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மெக்கானிக் பாடப்பிரிவுகள் மூடல்
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மெக்கானிக் பாடப்பிரிவுகள் மூடல்

By

Published : May 25, 2023, 7:32 AM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் கடந்த சில ஆண்டுகளாக காலியாக இருந்த மெக்கானிக்கல் (தமிழ்) மற்றும் சிவில் இன்ஜினியரிங் பாடப் பிரிவுகளில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 29 வது கல்விக் குழு கூட்டத்தில் இதற்குரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக சென்டர் ஆஃப் அகாடமி கோர்ஸ் இயக்குனர் ஹோஸ்மின் திலகர் உறுப்பு கல்லூரியின் இயக்குனர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு தொடர்ந்து வேலை இன்மையின் காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கையின் பொழுது எந்தெந்த கல்லூரியில் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என தேர்வு செய்து மாணவர்கள் குறிப்பிட்ட சில முன்னணி கல்வி நிறுவனங்களில் மட்டுமே சேர்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடக்கலை கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை அனைத்து பாடப்பிரிவுகளிலும் நடைபெறுகிறது.

உயர் கல்வித் துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 16 உறுப்பு கல்லூரிகள் துவக்கப்பட்டன. இந்த உறுப்பு கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைவாகவே இருந்து வருகிறது. கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர்கின்றனர்.

சமீப காலமாக பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை மாணவர்களிடம் உருவாகி உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் வழியில் மெக்கானிக்கல் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றும் வேலை செய்ய முடியாத நிலைமை உள்ளது. இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் அறிவுரையின் படி ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் பாட புத்தகங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மேலும் அவர்களுக்கு படிக்கும் பொழுது பயிற்சி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 29 வது கல்வி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் இளநிலை படிப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் கற்பிக்கப்படும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை 2023 மற்றும் 24 ஆம் கல்வி ஆண்டு முதல் நிறுத்தி வைக்க அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழ் வழியில் கற்பிக்கப்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான ஆரணி, விழுப்புரம், திண்டுக்கல், இராமநாதபுரம் அரியலூர், பண்ருட்டி, புதுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் நடப்பு ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது.

அதேபோல் தமிழ் வழியில் சிவில் பாடப்பிரிவினை கற்பிக்கும் திண்டிவனம், திண்டுக்கல், இராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, புதுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் பாடப் பிரிவுகள் நடப்பாண்டு முதல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதேபோல் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் மெக்கானிக்கல் பாடப்பிரிவு இராமநாதபுரம், அரியலூர், புதுக்கோட்டை திருக்குவளை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மூடப்படுகின்றன.

ஆங்கில வழியில் சிவில் பாடப்பிரிவுகளை கற்பிக்கும் அரியலூர், புதுக்கோட்டை ஆகிய கல்லூரிகளில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது என அதில் தெரிவித்து உள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் அறிவுரை வழங்கி உள்ளார். தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள் திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னை ஐஐடி தயாரிக்கப்படும் பிளேன் வடிவமைப்பிற்கு பாதுகாப்பு துறை அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details