சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நூலக வாசகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் 55 புத்தகப் பதிப்பாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா, மாணவர்கள் பள்ளிகளில் தங்களது தாய்மொழியில் படித்தால் நன்றாக கல்வி கற்க இயலும் என்றும் பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் தங்கள் தாய்மொழியிலேயே மாணவர்கள் கல்வி கற்கின்றனர் எனவும் கூறினார். அறிவியல் பாடங்களை மாணவர்கள் தாய்மொழியில் கற்றால் மட்டுமே நல்ல அடித்தளம் கிடைக்கும் என்றும் புதிய கல்விக்கொள்கையை பொறுத்தவரை அதனை அனைத்து தரப்பினரின் ஒப்புதலோடு நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.