சென்னை :அண்ணாநகரை சேர்ந்தவர் வெங்கடராஜு. இவர் சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எனது மகன் ஜெய் ஹரி சுதனுக்கு வரன் தேடி கே.எம்.வெட்டிங் ஈவண்ட் என்ற திருமண தகவல் மையத்தில் கடந்த 2016ல் பதிவு செய்தேன். அந்த நிறுவனத்தின் தலைவர் நேரடியாக தகவல் தரும் திட்டத்தின்கீழ் கட்டண தொகை ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்தையும் கட்டினேன்.
இந்த நிலையில், அந்த திருமண தகவல் மையத்திலிருந்து எனக்கு பெண்ணின் புகைப்படம் மற்றும் பெண்ணின் விபரங்களுடன் கடந்த 2017 அக்டோபரில் மெயில் வந்துள்ளது. மகனுக்கு வரன் வரும் என்ற மகிழ்ச்சியில் அந்த மெயிலை பார்த்தால் புகைப்படத்தில் இருக்கும்பெண் திருமணமானவர், அவர் கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருபவர் மேலும், எங்கள் குடும்பத்தினருக்கு அந்த பெண்ணின் கணவர் நெருக்கமானவர் என்று தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தெரியாமல் நடந்துவிட்டது, வேறு வரன்களின் விபரங்களை தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. இதையடுத்து, திருமண தகவல் மையத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன். எந்த பதிலும் வரவில்லை.
கே.எம்.திருமண தகவல் நிறுவனம் தனது சேவையை சரியாக செய்யவில்லை. திருமணமான பெண்ணின் விபரங்களை தவறாக அனுப்பியது அந்த நிறுவனத்தை நம்பி நல்ல வரன்களுக்காக ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இதுபோன்று சேவை குறைபாடுகளுடன் பொறுப்பில்லாமல் செயல்படும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.