சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த கொடுமையான காலகட்டத்தில், மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாததால், மக்கள் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் ஆம்புலன்ஸ் சேவை இருந்தாலும், அனைவருக்கும் சரியான நேரத்தில் அது கிடைப்பதில்லை.
இந்நிலையில், கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வசந்தகுமார், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏதேனும் செய்ய முடிவு செய்தார். தனது தொண்டு நிறுவனம் மூலம் இரண்டு ஆட்டோக்களை மினி ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். இந்த உயிர் காக்கும் சேவை குறித்து அவரிடம் கேட்டப்போது,’கரோனா நோயாளிகளை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றோம். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கின்றோம்.
இதுவரை 126 மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு வீட்டிற்கு சென்று ஆக்ஸிஜன் அளித்து, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். சில நேரங்களில் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்கப்பதற்கு சற்று காலதாதமாகும். அதுவரை காத்திருந்து நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியுள்ளது.
அப்போது அந்நோயாளிக்கு ஆட்டோவில் ஆக்ஸிஜன் வழங்குவோம். வீட்டில் உள்ள நோயாளிக்கு குறைவான அளவில் ஆக்ஸிஜன் தேவைப்பட்டால் அவர்களுக்கும் ஆக்ஸிஜன் அளிக்கிறோம். ஆக்ஸிஜன் தீர்ந்தால் உடனடியாக மாற்றுவதற்கு தேவையான ஆக்ஜிசன் சிலிண்டர் கையிருப்பில் வைத்துள்ளோம். கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளையில் உள்ள பணியாளர்களும் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்’என்றார்.
கரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஆக்ஸிஜன் இந்த வசதியைப் பெற: 9003112322,9840218142 ஆகிய எண்களுக்கு அழைக்கவும்.