சென்னை : அய்யம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவர் 2019ஆம் ஆண்டு தன்னையும், தனது குடும்பத்தினரையும் கடத்தி சொத்துகளை அபகரித்ததாக புகாரளித்திருந்தார்.
புகாரின் முகாந்திரம் குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல்செய்ய அப்போது தமிழ்நாடு டிஜிபியாக இருந்த திரிபாதி, சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். விசாரணையில் தொழிலதிபர் சீனிவாச ராவ், ராஜேஷிடம் கொடுத்த கடனுக்காக ரவுடிகள், காவல் துறை அலுவலர்கள் மூலம் பிரச்சினை கொடுத்தது தெரியவந்தது.
தொடர்ந்து, சென்னை திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் சீனிவாச ராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய, அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அலுவலர்கள் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்ய, சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். முதற்கட்டமாக, கோடம்பாக்கம் ஸ்ரீயை கானத்தூரில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், "ஸ்ரீனிவாச ராவ், அவரது மகன் தருண் பிரசாத் ஆகியோர் வெங்கடேசனிடம் ஏமாந்த பணத்தை வசூல் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது, சீனிவாச ராவிடம் வாங்கி ஏமாற்றிய பணத்தை தான் தொழிலதிபர் ராஜேஷிடம் வெங்கடேசன் கொடுத்தது தெரியவந்துள்ளது.