தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2021, 10:52 AM IST

ETV Bharat / state

நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்!

இந்தியாவின் தினசரி கோவிட் இறப்பு விகிதம் 4 ஆயிரத்துக்கு குறையவில்லை. இந்த அச்சமூட்டும் சூழ்நிலையில், 10 விழுக்காட்டிற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள 530 மாவட்டங்களில், 8 வார ஊரடங்கை அமல்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்
நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்

கடுமையான கோவிட் நெருக்கடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்பட்டுள்ளன. சுமார் பத்து நாட்களுக்கு முன்பு, அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், அனைத்து மருத்துவ மையங்களுக்கும் தடையின்றி ஆக்ஸிஜன் வழங்கப்படுவதையும், நாடு முழுவதும் இலவசமாகத் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறும், மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் கோரிக்கைக்கு சரியான பதில் கிடைக்காததைக் கண்டித்து, நான்கு முதலமைச்சர்களும், 12 எதிர்க்கட்சிகளும் கூட்டாக மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல், வைரஸைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

உண்மையிலேயே மிக மோசமான, இருண்ட சூழ்நிலையின் பின்னணியே மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகளை கூட்டாக முறையீடு செய்ய தூண்டியுள்ளது. மாபெரும் தடுப்பூசி உற்பத்தியாளராகப் புகழ்பெற்ற ஒரு நாடு, தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பது தெளிவாகத் திட்டமிடல் இல்லாததன் விளைவாகும்.

கடந்த பல ஆண்டுகளாக, நாட்டில் தேசிய இலவச தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நாட்டின் இலவச தடுப்பூசி வழிமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் மத்திய அரசிடம் ஒரு கேள்வியை முன்வைத்தது.

அரசு விறுவிறுப்புடன் செயல் வேண்டும்

தொற்றுநோயால் ஏற்பட்ட பெரிய அளவிலான பொருளாதாரப் பேரழிவின் பின்னணியில், நாட்டின் ஏழ்மையான பிரிவினரின் தலைவிதி குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தப் பின்னணியில் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

ஒருபுறம் தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை வரை நாட்டில் தொடர்ந்து இருக்கும் என்றும், மறுபுறம் ஆக்ஸிஜன் மற்றும் பிற உயிர் பாதுகாப்பு மருந்துகளின் பற்றாக்குறை இருக்கும் என்ற மதிப்பீடுகளின் பின்னணியில், மாநிலங்களின் ஆதரவுடன் நிலைமையைச் சரிசெய்ய மத்திய அரசு விறுவிறுப்பாக செயல்பட வேண்டும்.

இங்கிலாந்தில் 14 மாதங்களுக்குப் பின்

சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக, இங்கிலாந்து சில நாட்களுக்கு முன்பு கோவிட் மரணங்கள் இல்லாமையைப் பதிவு செய்துள்ளது. அந்த நாட்டில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் பாதிப்புகள் உள்ளன. இதுபோன்ற 37 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகள் நாடு முழுவதும் பதிவாகின்றன.

ஒட்டுமொத்த 2.37 கோடி கோவிட் பாதிப்புகள் மற்றும் 2.6 லட்சம் இறப்புகளுடன், இந்தியாவின் தினசரி கோவிட் இறப்பு விகிதம் 4,000க்கு குறையவில்லை. இந்த அச்சமூட்டும் சூழ்நிலையில், 10 விழுக்காட்டிற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள 530 மாவட்டங்களில் 8 வார ஊரடங்கை அமல்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டால், கடந்த ஆண்டு ஊரடங்கின்போது பொருளாதார பேரழிவைச் சந்தித்த ஏழை கூலி தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை என்னவாகும்? புகழ்பெற்ற இந்திய பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ் இந்தியா ஒரு பெரிய வாழ்வாதார நெருக்கடியின் பிடியில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

தொற்றுநோயால் ஏராளமான மக்களின் கடின உழைப்பில் இருந்த சேமிப்பு கரைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் ஜீன் ட்ரெஸ், அதே நேரத்தில் இந்த நிலைமைக்கு ஒரு தீர்வாக சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார். முன்னதாக, அரசாங்கம் அறிவித்த நிவாரண நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு, ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பணப் பரிமாற்றத்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்காவின் பைடன் அரசாங்கம் தனது நாட்டின் குடிமக்களுக்கு 138 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகுப்பின் மூலம் மக்களுக்கு வேலையின்மை உதவித்தொகை மற்றும் சிறுவணிகர்களுக்கு உதவி போன்ற நேரடி நிதி சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கிடையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்குமாறு மத்திய மற்றும் டெல்லி, ஹரியானா மற்றும் உ.பி அரசுகளுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதன் மூலம் பட்டினி இறப்பைத் தடுக்கும் பொறுப்பை அரசாங்கங்கள் ஏற்க வேண்டும். கோடிக்கணக்கான ஏழை மக்களின் பசியைப் போக்க நாட்டின் உணவு மற்றும் தானியங்கள் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details