சென்னை:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 32வது நினைவுதினம் (Rajiv Gandhi's death anniversary) நாடு முழுவதும் இன்று (மே 21) (மே 21) அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜிவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இசைக்குழுவினர் தேசபக்தி பாடல்களை பாடினர். பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்க உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, சைதாப்பேட்டையில் உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு, கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் சென்னை ராயப்பேட்டையில் சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.