சென்னை:தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நாராயணன் மற்றும் பாஜக முன்னாள் ராணுவ பிரிவின் மாநில தலைவர் ராமன் ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் இன்று (பிப்.16) புகார் ஒன்றை அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணன் திருப்பதி, “பாஜக பட்டியலின பிரிவு தலைவர் தடா பெரியசாமியின் வீட்டையும், வாகனத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சில குண்டர்கள் தாக்கியுள்ளனர்.
இந்து கட்சிகள் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களை தொடர்ச்சியாக திமுக கூட்டணி கட்சிகள் தாக்கி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரண்டு நாட்களாகியும் தடா பெரியசாமி வீட்டின் மீது தாக்குதலில் நடத்திய விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருமாவளவன் தனது கட்சியை சரியான முறையில் நடத்துவது கிடையாது. உடனடியாக, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் நாயக் பிரபு என்பவருடன் ஏற்பட்ட தகராறில் திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை தாக்கி கொலை செய்தனர். இவர்களுக்கு இவ்வளவு அகம்பாவம் எங்கிருந்து வந்தது. திமுக ஆட்சியில் காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.