சென்னை: தமிழ்நாட்டில் இன்றைய நாளான அக்டோபர் 26ஆம் தேதியை ஒட்டி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனவும், பருவமழையின் தாக்கம் இயல்பாகவே இருக்கும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு - வட கிழக்குப் பருவமழை வேறுபாடு
நமது ஈ டிவி பாரத் ஊடகத்திடம் பேசிய அவர், "தென்மேற்குப் பருவமழைக்கும் வடகிழக்குப் பருவமழைக்கும் அதிக வேறுபாடு உள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 60 விழுக்காடு மழையும், உள் மாவட்டங்களில் 50 விழுக்காடு மழையும் வடகிழக்குப் பருவமழையின்போது கிடைக்கிறது.
வளர்ச்சியடைந்த தொழில் நுட்பம்
10 ஆண்டுகளுக்கு முன்பு வானிலை ஆய்வு மையத்தில் தொழில்நுட்பம் போதுமானதாக இல்லை. ஆனால் இப்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் உள்ளிட்ட அனைத்து கடல் சார்ந்த நிகழ்வுகளை துல்லியமாக சொல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது" என்றார்.