கோயம்பேட்டில் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு அடி, உதை.. ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பரபரப்பு புகார்! சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் நபர்களில் பலர் பேருந்து மூலமாகச் சென்னை வந்தடைகின்றனர். அவ்வாறு வரும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அதிக அளவில் வருவது வழக்கம். பயணிகளை ஏற்றி செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் சுற்றி நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும்.
இதே போல பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ராபிடோ, ஓலா ஓட்டுநர்களும் வெளியே காத்து கொண்டு இருப்பதைக் காண முடியும். ஆட்டோ கட்டணத்தை விட குறைவு என்பதால் அதிக லக்கேஜ் இல்லாமல், தனியாக வந்திறங்கும் பயணிகள் பைக் டாக்சியை பயன்படுத்துவார்கள், லக்கேஜ் அதிகமுள்ள பயணிகள், ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களுடன் வரும் பயணிகள் ஆட்டோ அல்லது டாக்சிகளில் பயணம் மேற்கொள்வார்கள்.
பைக் டாக்சிகள் புழக்கத்திற்கு வந்ததிலிருந்த தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளை ஏற்ற வரும் ஓலா மற்றும் ராபிடோ போன்ற பைக் டாக்சி ஓட்டுநர்களைக் குறிவைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவமானது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை ராபிடோ ஓட்டுநரான சஞ்சய் (19) என்ற இளைஞர் தனது வாடிக்கையாளருக்காக கோயம்பேடு பேருந்து நிலைய வாசலில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி என்பவர், ராபிடோ ஓட்டுநரான சஞ்சயை பார்த்து, "நீங்கள் இங்கு வரக்கூடாது" என திட்டி உள்ளார்.
மேலும், சஞ்சய் மீது ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி திடீரென கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் முகத்தில் காயம் அடைந்த ராபிடோ ஓட்டுநர் சஞ்சய் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சி.எம்.பி.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராபிடோ ஓட்டுநர்கள் சென்னை காவல் ஆணையரகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராபிடோ ஓட்டுநர்கள் "தங்களது வாடிக்கையாளர்களை பிக் அப் செய்ய போகும்போது தொடர்ச்சியாக ஆட்டோ ஓட்டுநர்களால் தாங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு முறை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
இத்தனைக்கும், நாங்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லாமல் எங்களை புக் செய்த வாடிக்கையாளருக்காக சாலை ஓரத்தில் சில நிமிடங்கள் காத்திருக்கும் போதே ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்தனர். தங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து உள்ளதாக ராபிடோ ஓட்டுநர்கள்" தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆருத்ரா மோசடியில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு!