சென்னை:இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்குத் தேவையான கோரிக்கைகளை வினாவாக எழுப்பினர். அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான விஜயதாரணி முறை வந்தபோது உறுப்பினர் விஜயதாரணி என அழைத்த சபாநாயகர், மீண்டும் விஜயதாரணி இருக்கையில் இருக்கியா? இல்லையா? என உரிமையோடு பேச அழைத்தார்.
பின்னர் எழுந்து பேசிய விஜயதாரணி, "கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இழப்பீடு தருவதிலும் தாமதம் உள்ளது. குன்னத்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்கள் இழப்பீடு கிடைக்காமல் போராடி வருகிறார்கள். இதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?’’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, “இந்த சாலை பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் நடைபெற்று வரக்கூடிய பணி. ஆனாலும் கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருவதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்து பேசியுள்ளோம்” என பதில் அளித்தார்.