சென்னை: 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில், தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக அப்போதைய நெடுஞ்சாலைத் துறை மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமைச்செயலர், நெடுஞ்சாலைத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
இது தொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் தன் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. இந்நிலையில், தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக, மானநஷ்ட ஈடாக 1 கோடியே 10 லட்ச ரூபாய் வழங்கவும், தனக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட அறப்போர் இயக்கம் மீது தடை விதிக்கக்கோரியும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், டெண்டர் ஒதுக்குவது அரசின் கொள்கை முடிவு என்றும்; இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்து கொள்ளவில்லை என்றும்; டெண்டரில் கலந்து கொண்ட எந்த நிறுவனங்களும் டெண்டருக்கு எதிராகவும் வழக்குத்தொடரவில்லை எனவும் கூறப்பட்டது. தம்முடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம்சாட்டப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அறப்போர் இயக்கம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்தப் புகாரை தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்றும், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.