இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தர்மபுரி மாவட்ட மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கான தொடக்க நிலை பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அங்கு சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தை அமைக்க வேண்டும் என கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து பாமக வலியுறுத்தி வந்தது.
சிப்காட் வளாகம் அமைப்பதற்காக அதகப்பாடி, தடங்கம், அதியமான் கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங்களில் 1183.05 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள், 550.35 ஏக்கர் பட்டா நிலங்கள் என மொத்தம் 1733.40 ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.
தர்மபுரி தொகுதி மக்களவை உறுப்பினராக பணியாற்றிய போது மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிப்காட் வளாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தர்மபுரியில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரி தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தில் கடைசி இடத்தில் இருப்பது தருமபுரி மாவட்டம் தான். இந்நிலையை மாற்ற சிப்காட் வளாகம் அமைக்கப்படுவது மிகுந்த பயனளிக்கும்.
தருமபுரி மாவட்டத்தில் மிகச்சிறந்த மனித வளம் இருக்கும் போதிலும், தொழிற்சாலைகள் இல்லாததால் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெங்களூர், சென்னை என பிற நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றுள்ளனர். சிப்காட் வளாகம் செயல்பாட்டுக்கு வரும்போது அவர்களில் பெரும்பான்மையினர் சொந்த ஊருக்கு திரும்பி பணியாற்றும் நிலை உருவாகும்.
எனவே, சிப்காட் தொழில் வளாகத்தை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாகப் பெற்று பணிகளைத் தொடங்க வேண்டும். இதற்குத் தேவையான நிர்வாக ஆணைகளையும், சிப்காட் வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் அரசு விரைவில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.