இதுகுறித்து பாமக இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், "அன்புள்ள நடிகர் சூர்யா அவர்களுக்கு வணக்கம்.
தமிழ்த்திரையுலகில் இளம் நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்திருப்பதற்கு வாழ்த்துகள். அனைவரும் நேசிக்கும் கதாநாயகனாகத் திகழ்ந்த நடிகர் சிவகுமார் அவர்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தாங்களும், சகோதரர் கார்த்தியும் தமிழ்த் திரையுலகில் முன்னேறி வருகிறீர்கள்.
வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது
தங்களின் தயாரிப்பில், தங்களைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள ‘ஜெய்பீம்’ என்ற தலைப்பிலான திரைப்படம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் மத்தியில் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
'ஜெய்பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்குத் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் மேலோங்கியுள்ள நிலையில், தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் தங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது.
அடக்குமுறை யார் மீது கட்டவிழ்க்கப்பட்டாலும், அவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
மக்கள் கொந்தளிப்பு
'ஜெய்பீம்' திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல் துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்தப் பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை.
திரைப்படம் என்பது அழகையும், கலையையும் அவற்றுடன் கலந்து சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளையும் வெளியிட வேண்டிய சிறந்த ஊடகம் ஆகும். ஆனால், ஜெய் பீம் திரைப்படத்தில் அத்தகைய சிறப்பு மிக்க ஊடகம் வன்மத்தை வெளிப்படுத்தவும், அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சியுள்ளவர்களால் ஏற்க முடியாதது.
வினாக்களுக்கு சூர்யா விடையளிக்க வேண்டும்
'ஜெய்பீம்' திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு பல ஐயங்கள் உள்ளன. அவர்களின் நியாயமான ஐயங்களைப் போக்க அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கீழ்க்கண்ட வினாக்களுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். அந்த வினாக்கள்:
1. 'ஜெய்பீம்' உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தானா?
2. உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றால், உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த முதனை கிராமமா? அல்லது விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா?
3. உண்மை நிகழ்வில் முதனை கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்ற இளைஞரை கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்துப் படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது தங்களுக்குத் தெரியுமா? இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் 'ஜெய்பீம்' திரைப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது.
4. ராஜாக்கண்ணுவை படுகொலை செய்த காவல் அலுவலரின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு ராஜாக்கண்ணு, அவருக்காக போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அலுவலரான காவல்துறை ஐ.ஜிக்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குநரும், சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்குப் பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?
5. காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி, இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரானப் போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும் தான் தமக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும் போது திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், சாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்?