தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு பிடிவாதம் காட்டுவது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

சென்னை : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு பிடிவாதம் காட்டுவது ஏன் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன் அறிக்கை
டிடிவி தினகரன் அறிக்கை

By

Published : Jun 9, 2020, 12:11 PM IST

தமிழ்நாட்டில், வருகிற ஜூன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “கரோனா பாதிப்பினால் தெலங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியிருந்த புவியியல் தேர்வு, செய்முறைத் தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்து முந்தைய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்திலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், முந்தைய தேர்வு மதிப்பெண்களின் படியே தேர்ச்சியை அறிவிக்க இருக்கிறார்கள்.

10 ஆம் வகுப்புக்கு மட்டுமல்ல மகாராஷ்டிராவில் பட்டப்படிப்புக்கான இறுதியாண்டு தேர்வுகளையே ரத்து செய்துவிட்டு முந்தைய பருவத்தேர்வுகளின் கூட்டு மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்குவதுதென முடிவெடுத்திருக்கிறார்கள்.

டிடிவி தினகரன் அறிக்கை

ஆனால் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் தமிழ்நாட்டில் மட்டும் பழனிசாமி அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவது என்று பிடிவாதம் பிடிப்பது ஏன்? என்று தெரியவில்லை. அதிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட தேர்வுத்துறை இணை இயக்குநரே கரோனா பாதிப்புக்கு ஆளான பிறகு விடாப்பிடியாக இருக்கிறது அரசு.

டிடிவி தினகரன் அறிக்கை

அடுத்தடுத்த நாட்களில் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசே சொல்லியிருக்கிற நிலையில், ஒன்பது லட்சம் மாணவர்கள், சுமார் நான்கு லட்சம் ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களின் உயிரைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லையா?

பேரிடர் நேரத்தில் எத்தனையோ விதிமுறைகளை திருத்தி எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள சூழலில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதால் யாருக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்போகிறது? எனவே, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல 10 ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...பொதுத்தேர்வு நடத்துவது சரியா? மாநில அரசிற்கு ஸ்டாலின் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details