மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவரும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் கட்சிகளும் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில் இத்தகைய தொழிலாளர் எதிரான சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற (நவ. 26) அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும், அன்றைய தேதியில் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அரசு தலைமை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் அனுப்பிய சுற்றறிக்கையில், “தொழிற்சங்கங்கங்கள் சார்பில் வருகின்ற 26ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் கலந்துகொள்வது அரசின் நடத்தை விதி சட்டம் 1973-யின் படி 20,22, 22 A ஆகியவற்றிக்கு மாறானது ஆகும்.
அரசின் விதிமுறைகளை மீறி வேலைநிறுத்தப்போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் அரசு ஊழியர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் நடைபெறும் நாளில் வேலைக்கு வராமல் விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு " No Work No Pay " என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். அதேபோல், போராட்டம் நடைபெறும் நாளன்று மருத்துவ விடுப்பை தவிர்த்து மற்ற யாருக்கு விடுப்பு எடுக்க அனுமதியில்லை.
போராட்டம் நடைபெறும் (நவ. 26) நாளான்று காலை 10.15 மணிக்குள் ,அனைத்து அரசு அலுவலகங்களில் தலைமை அலுலவர்கள், தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை பதிவை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்”. எனத் தெரிவித்துள்ளார்