சென்னை:துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னை வரும் ஸ்ரீலங்கன் விமானத்தில் பெரிய அளவிலான தங்கம் கடத்தப்படுவதாகவும், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய இலங்கை மற்றும் துபாய் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், துபாயிலிருந்து இலங்கை வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு வெளியில் வந்தார். அவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணித்தனர். அந்தப் பயணி விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்து ஆட்டோ ஒன்றில் ஏறி சென்னை புறநகர் பகுதிக்கு சென்றார். மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளும் மற்றொரு ஆட்டோவில் அவரை பின்தொடர்ந்தனர்.
பின்னர், அந்தப் பயணி சென்னை புறநகரில் அவரது வீட்டுக்கு அருகே சென்று ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய போது, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக அவரை பிடித்தனர். அப்போது அவரது பேன்ட்டில் நிறைய பைகள் இருந்தன. மேலும், அவர் அணிந்திருந்த முழங்கால் பட்டையில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்து ரூ.8.30 கோடி மதிப்புடைய 13.3 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த கடத்தல் பயணியை கைது செய்தனர். அதோடு அவரை சென்னை விமான நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.