தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 24, 2023, 10:45 PM IST

ETV Bharat / state

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை - அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல்

ஓபிஎஸ்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தேர்தல் என்று வந்துவிட்டால் அதிமுக போல் களப்பணி செய்பவர்கள் யாரும் இல்லை எனவும் அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை- அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல்
அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை- அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல்

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை - அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல்

சென்னை:கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்ய முடியுமா? என்பது குறித்தும், ஓபிஎஸ்-ன் அரசியல் என்ன ஆகும் என்பது குறித்தும் ஆர்.எம்.பாபு முருகவேல், அதிமுக செய்தித் தொடர்பாளர் (அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்) நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், 'வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதிமுக தொண்டர்கள் அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளனர். காரணம் என்னவென்றால் ஜெயலலிதா எந்த அளவிற்கு அதிமுகவை வழி நடத்தினாரோ, அந்த வகையில் வலிமையான தலைமையை பெற்றிருக்கிறோம். இன்றைய தினத்தில் கட்சியை சீரோடும், சிறப்போடும் எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே நடத்த முடியும்.

மேலும், இந்த தீர்ப்பில், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும்; ஓபிஎஸ் உள்ளிட்ட ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது செல்லும் எனவும் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் மீண்டும் நிரந்தர பொதுச்செயலாளராக வருவதற்கான வாய்ப்புகள் வெகுவிரைவில் இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்ற பொதுக்குழு வழக்கின் மீதான தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 11.7.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்றது.

அதன் மீது எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என்றும், தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் தரப்பு மேல்நிலை செய்ய வாய்ப்பு இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டமே இதுவரை 11 முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு இயக்கத்தின் சட்டவிதிகளை திருத்த முடியாது என்று, யாராலும் எந்த காலகட்டத்திலும் சொல்ல முடியாது. காலம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றதுபோல் சட்ட விதிகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், என்ற புதிய விதிகளை உருவாக்கி திருத்தப்பட்டது.

ஆனால், அது சரிப்பட்டு வராது, இந்த இயக்கத்திற்கு என்று ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவின் அடிப்படையில் தான் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை மாற்ற முடியும் என்று சொல்வதற்கு வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.

என்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவிலாக நினைக்கக்கூடிய தலைமை கழகத்தை காலால் எட்டி உதைத்து, கடப்பாரை கொண்டு கற்களால் அடித்து உடைத்து நொறுக்கினார்களோ அன்றைய தினமே அடிப்படை உறுப்பினர் என்னும் தார்மீக பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் இறங்கிவிட்டார்.

இனி அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தேர்தல் என்று வந்துவிட்டால் அதிமுக போல் களப்பணி செய்பவர்கள் யாரும் இல்லை. இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தலில், இரட்டை இலை சின்னம் மற்றும் இந்த தீர்ப்பு என இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தேர்தலை சந்திக்கிறோம். 21 மாத திமுக ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள், எனவே அதிமுக மாபெரும் வெற்றி பெறும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Live:மயிலாடுதுறையில் மருத்துவர் ராமதாஸ் 'தமிழைத்தேடி' விழிப்புணர்வு பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details