சென்னை: தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவிப்பேராசிரியர்கள் பணியை வரைமுறைபடுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
கடந்து 2012ஆம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 உதவிப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதாகவும், அவர்களை அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த அதிமுக ஆட்சி அறிவித்தது. ஆனால், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தினால் இன்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், பல்கலைக்கழகங்களுக்குக்கீழ் செயல்படுகின்ற 41 கல்லூரிகளின் ரூ.152 கோடி செலவை அரசே ஏற்கும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், கல்லூரிகளுக்கு பணமும் ஒதுக்கவில்லை. அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று விமர்சனம் செய்த அமைச்சர் அந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அந்த அடிப்படையில் 41 கல்லூரிகளும் அரசு உடைமை ஆக்கப்பட்டது. அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அந்தக் கல்லூரிகளில் பணியாற்றிய சிறப்பு விரிவுரையாளர் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.