சென்னை:இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் துணைத் தலைவர் செந்தில் தொண்டைமான், இலங்கை சமூக உள்கட்டமைப்புத் துறையின் அமைச்சர் ஜீவன் தொண்டைமான், ராமேஸ்வரம் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது, இலங்கைத் தமிழர் நலன், மீனவர்கள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து செய்தியாளரிடம் பேசிய செந்தில் தொண்டைமான், “இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக இலங்கையிலுள்ள மலைவாழ் மக்களுக்கும் நட்புறவு குறித்துப் பேசப்பட்டது.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கையில் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இதைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கை குறித்து பேசப்பட்டது. எதிர்காலத்தில் இலங்கை மீனவர்களுக்கும், தமிழ்நாடு மீனவர்களுக்கும் எவ்வாறு நட்புறவு ஏற்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது.
1974 - 76ஆம் ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கைக்குப் பின்புதான் இலங்கையிலும், இந்தியாவிலும் மீனவர்கள் போராடிவருகின்றனர். இரண்டு பக்க மீனவர்களின் வாழ்க்கை நிம்மதியற்று உள்ளது. அந்தக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் முறையான முறையில் இல்லை எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தபோது, இதுபற்றி மறுபரிசீலனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.