சென்னை:குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளாராக தன் சினிமா பயனத்தை தொடங்கியவர் இன்று சினிமாவின் மூத்த கதாநடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்திற்காக உடல் எடையை கூட்டி வித்தியாசமான கெட்டப்பில் வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இயக்கத்தில் “அயலான்” என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நீண்ட வருடங்களாக சிறப்பான முறையில் தயராகி வருகின்றது என படக்குழுவினர் அவ்வப்போது தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மண்டேலா படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் "மாவீரன்" படத்தில் நடித்து உள்ளார். தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குநர் என்பதால், இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மாவீரன் படம் வெளியாகிறது. இந்த படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று படகுழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.