டெல்லி :தங்க நகை சேமிப்பு திட்டமான ‘பொன்சி’ என்ற திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.100 கோடி வரையிலான பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட கால பிராண்ட் அம்பாசிடராக இருந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை குறுகிய காலத்திலேயே அதன் கிளைகளை சென்னை, மதுரை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விரிவுபடுத்தியது. மேலும், மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு விளம்பரங்களை செய்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது.
அந்த வகையில், இந்த கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பிரணவ் ஜுவல்லர்ஸ் தங்க நகை சேமிப்பு திட்டத்தில், பல்வேறு கிளைகளிலும் மக்கள் தங்கள் பணத்தைக் கட்டினர். அதையடுத்து இந்த சேமிப்பு காலம் முடியும் வரை காத்திருக்கலாம் என எண்ணிய முதலீட்டாளர்களுக்கு அதிச்சி அளிக்கும் வகையில், பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை அதன் கிளைகளை ஒவ்வொன்றாக மூடியது.
இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை மீது மோசடி புகார் அளித்தனர். இந்த புகார் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்த புகார்களின் அடிப்படையில் திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு, பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் மதன் மீது வழக்குப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து, அவருக்கும் அவரின் மனைவிக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று (நவ. 23) வெளியிட்ட அறிக்கையில், "தங்க நகை சேமிப்பு திட்டம் என்ற பெயரில் பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. லாபம் வரவில்லை என்பதைத் தாண்டி, முதலீடு செய்யப்பட்ட தொகையும் முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரவில்லை" என்று தெரிவித்து இருந்தது.
மேலும், பிரணவ் ஜுவல்லர்ஸ் குறிப்பிடப்பட்டுள்ள சில சப்ளையர்கள், அந்நிறுவனத்திற்கு ரூ.100 கோடிக்கும் மேல் கருப்பு பணத்தை வெள்ளையாக்க உதவியதாக ஒப்புக்கொண்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மோசடி வழக்கில் சிக்கியுள்ள பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அளவில் பிராண்ட் அம்பாசிடராக இருந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க:பிரதமர் மோடி குறித்து விமர்சனம்..! ராகுல்காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!