சென்னை:நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் லேபில் ஒரிஜினல் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களின் மூலம் வெற்றி இயக்குநராக அறியப்பட்டவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். இவர் முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார். லேபில் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரிஸை இயக்கியதோடு மட்டுமில்லாமல், இந்தப் படத்தின் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். மேலும் கூடுதலாக இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதி உள்ளார்.
லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்து உள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸ்க்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளனர்.