சென்னை:வடபழனி நெற்குன்றம் பாதைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். விக்ரம் வேதா உட்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
போலி நகைகளை வைத்து மோசடி
இவருடன் பணிபுரியும் துணை நடிகை சலோமியா என்பவர் பிப். 17ஆம் தேதி, ரமேஷைத் தொடர்பு கொண்டு தனது பாட்டிக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவரது மருத்துவ செலவுக்குப் பணம் தேவைப்படுவதால் தனது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுத் தருமாறு அவரை கேட்டுள்ளார்.
அதற்கு ஒப்புக்கொண்ட ரமேஷ், பிப். 1-ஆம் தேதி சலோமியாவிடம் இருந்து 43 கிராம் தங்க நகைகளை பெற்றுள்ளார். அதன்பின்னர், ரமேஷ் சாலிகிராமம் நெற்குன்றம் பாதைப் பகுதியில் உள்ள தனக்கு தெரிந்த அடகு கடையில், சலோமியா கொடுத்த நகைகளை அடமானம் வைத்து ரூ.1.50 லட்சம் பணம் வாங்கி சலோமியாவிடம் கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் (மார்ச் 14) அடகு கடை உரிமையாளர் உத்தம்சந்த் சேட், ரமேஷைத் தொடர்பு கொண்டு நீங்கள் அடகு வைத்த நகைகள் போலி என்றும் அடகு வைத்து வாங்கிச் சென்ற ரூ.1.50 லட்சம் பணத்தைத் திருப்பி கொடுத்து விட்டு நகைகளை வாங்கி செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.
நடிகை மீது புகார்
இதனைக் கேட்டு, அதிர்ந்துபோன ரமேஷ், உடனே சலோமியாவைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார். அதற்கு சலோமியா அடகு வைத்த நகைகள் என்னுடையதுதான் என்றும், பணத்தை திருப்பிக் கொடுத்து நகைகளை வாங்கிக் கொள்வதாகக் கூறியவர் நேற்று வரை (மார்ச் 15) பணத்தை திருப்பித் தரவில்லை. சந்தேகமடைந்த ரமேஷ், சலோமியா வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.
இதனால், செய்வதறியாது திகைத்து நின்ற ரமேஷ், இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சலோமியா மீது புகார் அளித்தார். அதில் போலி நகைகளை கொடுத்து ரூ.1.50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு தலைமறைவான நடிகை சலோமியா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு புகாரில் கேட்டு கொண்டுள்ளார். இதையடுத்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி நகையைக் கண்டறிய முடியவில்லை
இதுதொடர்பாக, அடகு கடை உரிமையாளர் உக்தம் சந்த் கூறுகையில், "இந்த நகை உண்மையான தங்க நகையை போல் இருக்கிறது. போலி தங்க நகைகளை கண்டறியும் அமிலத்தை இந்த நகை மேல் தெளித்தும் கூட போலி என கண்டறிய முடியவில்லை.
தங்க நகைக்கான முத்திரை இந்த நகைளில் இருக்கிறது. துணை நடிகையோடு சேர்ந்து ஒரு கும்பல் இதுபோன்று போலி நகைகளை அடகு வைத்து ஏமாற்றி வருகிறது. துணை நடிகை, அந்த கும்பலை பிடித்து காவல் துறை விசாரணை நடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:இந்தப் பாடலை பாடியவர் உங்கள் 'விஜய்' : பீஸ்ட் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு