சென்னை:கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன நாட்டை சார்ந்த ஆயுதப்படையான ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தி, இஸ்ரேலில் மக்களை பிணைக்கைதிகளாகக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீன நாட்டின் மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டது. குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட காசா பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள், பெண்கள், குழந்தைகள், என ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர்.
இந்நிலையில் அண்மையில் காசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடந்த வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக உலகின் பல்வேறு நாட்டுத்தலைவர்கள் தங்களின் போரை உடனடியாக நிறுத்தும் படி தெரிவித்தனர்.
மேலும் இன்று மாலை பாலஸ்தீன நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் மூலம் 704 காசா வாழ் பாலஸ்தீனியர்கள் மரணமடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களது கண்டனங்களைப் போராட்டம் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.