3 வருடங்களாக போராடுவதாக முந்திரி வியாபாரி வேதனை சென்னை:கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்திராமன். இவர் தனது மகன் கணேச மூர்த்தியுடன் இணைந்து சொந்தமாக ‘அனிதா கேஷ்யூ நட்ஸ்’ என்ற பெயரில் கடை நடத்தி வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு வியாபாரி ஒருவர் மூலமாக அண்ணா நகரில் ‘v3 elite forte pvt ltd’ என்ற பெயரில் நட்ஸ் வியாபாரம் செய்யும் முகமது என்பவருடன் கணேச மூர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முகமது பல கிளைகள் நடத்தி வருவதாகவும், தனக்கு 43 லட்ச ரூபாய் மதிப்பிலான முந்திரி வேண்டும் என கணேச மூர்த்தியிடம் தெரிவித்ததாக கூறப்படுக்கிறது. இதனால் கணேச மூர்த்தி தனக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து கடனை பெற்று 43 லட்ச ரூபாய்க்கான முந்திரியை ரெட் ஹில்ஸ் பகுதியில், முகமது கூறிய குடோனில் இறக்கியதாக கூறப்படுகிறது.
முந்திரிக்கு உண்டான 43 லட்ச ரூபாயை முகமது காசோலை மூலமாக கணேச மூர்த்திக்கு கொடுத்த நிலையில், அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது அது போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. உடனே கணேசமூர்த்தி ரெட் ஹில்சில் உள்ள முகமது குடோனுக்கு சென்று பார்த்த போது முந்திரி எடுக்கப்பட்டு, அவரின் அலுவலகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
முகமது தலைமறைவானதால் அதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசமூர்த்தி ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, முகமது மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் மத்திய குற்றப்பிரிவினர் முகமதிடம் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் பணத்தை திருப்பித் தருமாறு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
ஒரு சில மாதங்கள் 5 லட்ச ரூபாய் வரை கொடுத்துவிட்டு, அதன் பின்னர் முகமது பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 வருடங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் முகமது இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டி பாதிக்கப்பட்ட கணேச மூர்த்தி அவரது தந்தையுடன் மீண்டும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தை நாடி உள்ளார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கணேச மூர்த்தி, கடந்த 2020ஆம் ஆண்டு 43 லட்ச ரூபாய் மதிப்பிலான முந்திரியை வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்த முகமது மீது, புகார் அளிக்க சென்ற போது ரெட்ஹில்ஸ் மற்றும் அண்ணா நகர் காவல் நிலையம் என அவர்களின் எல்லை பிரச்சினையில் கடந்த 1 வருடங்களாக தன்னை அலைக்கழிக்க வைத்ததாக தெரிவித்தார்.
சொந்த ஊரில் பலரிடம் கடன் பெற்று இருப்பதால், மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், ஊருக்கு சென்றால் பணம் கேட்டு தாக்குவதாகவும், தனது தந்தை மற்றும் உறவினர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் கூறினார். இதனால் தான் பயந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி கேட்டரிங் வேலை செய்து பிழைப்பை நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறினார்.
மூன்று வருடங்களை கடந்தும், இழந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை என்றும், இனிமேலும் பணம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பேட்டியின் போது கணேசமூர்த்தியின் தந்தை மயக்கம் அடைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:சென்னை குருநானக் கல்லூரியில் 18 மாணவர்கள் டிஸ்மிஸ்.. வெடி விவகாரத்தில் காவல்துறை விளக்கம் என்ன?