மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "இங்கே வருகை தந்திருக்கும் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் மாணவர்களின் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் முன்னாள் முதலமைச்சர் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார். இந்தியாவில்அதிக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய பெருமை ஜெயலலிதா ஒருவரைத்தான் சாரும்.
அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு இந்திய வரலாற்றில் 45 லட்சத்து 72 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். மேலும் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறை அடுத்த மாத இறுதிக்குள் கணினி முறைக்கு மாற்றப்படும்.
அடுத்த வார இறுதிக்குள் இணையசேவை வழங்கப்படவிருக்கிறது. அதே போல் 6, 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
கரும்பலகைகளுக்குப் பதிலாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்ட்டுகள் பொருத்தப்படவிருக்கிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும் "என்றார்.
இதையும் படிங்க: ஆரணியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி; மாவட்ட ஆட்சியர் தொடக்கம்!