உலகின் மற்ற நாடுகளைவிட சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
தற்போது நீடித்து வரும் கரோனா தொற்று பரவலால், அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் வேலையிழக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். வேலையிழந்த சிலர் ஊருக்குத் திரும்ப முடியாமலும் நெருக்கடியான சூழலிலும் வாழ்ந்து வருகின்றனர். கரோனா பெருந்தொற்றால், கடந்த மூன்று மாதங்கள் விமான சேவைகளும் தடைசெய்யப்பட்டன. இந்நிலையில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்தது.
அதனடிப்படையில், சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்களின் நடவடிக்கையால் 175 இந்தியா்கள் ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் மூலம் அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வந்தடைந்தனர். இதில், 86 ஆண்கள், 81 பெண்கள், ஏழு குழந்தைகள், சிறுவர் உட்பட மொத்தம் 175 பேர், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், 30 பேர் இலவச தங்குமிடத்திற்காக மேலக்கோட்டையூர் விஐடி கல்வி நிறுவனத்திற்கும், 145 பேர் கட்டண தங்குமிடமான சென்னை மாநகர விடுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா்.