சென்னை: சென்னையில் மாதவரம் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 37 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மக்கள் மற்றும் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முன்னதாக மாதவரம் பகுதியில் இயங்கும் பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்திலிருந்து உணவை, விநியோக செய்யும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது ஒரு போலியான வாதம், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் ஓரிரு பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டு சில நாட்களில் முடிவுக்கு வந்தது. மிகவும் சுகாதார முறையில் இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட சென்னை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் இந்த காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, தயாரிக்கப்படும் உணவு தரம் மற்றும் தயாரிப்பிடம் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2020இல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில் காலை உணவுத் திட்டம் இருக்கிறது என்று சொன்னால், அப்போதே ஏன் தமிழ்நாட்டில் திட்டத்தை தொடங்கவில்லை, அப்போது அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது தொடங்காமல், இப்போது பேசுகின்றனர்.