தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு முழுவதும் ஐ.எப்.எஸ் நிதிநிறுவனத்திற்குச்சொந்தமான 21 இடங்களில் சோதனை!

By

Published : Aug 5, 2022, 5:16 PM IST

Updated : Aug 5, 2022, 6:14 PM IST

இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்குச்சொந்தமான 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவது ஐ.எப்.எஸ் நிதிநிறுவனத்திற்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை
தமிழகம் முழுவது ஐ.எப்.எஸ் நிதிநிறுவனத்திற்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை

சென்னை:வேலூரை அடிப்படையாகக்கொண்டு 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்களாக லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இருந்து, இணைந்து நடத்தி வருகின்றனர். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாகக்கூறி தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனம் வசூல் செய்துள்ளது.

அவ்வாறு வசூல் செய்யும் நபர்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு இரண்டு விழுக்காடு வட்டிக்கு கடன் வாங்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு வசூல் செய்த பணத்தை பங்கு வர்த்தகத்தின் முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பதாகவும், அந்த லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு பங்கு தருவதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்தனர்.

பல்வேறு Whatsapp குழுக்கள் அமைத்து முதலீடு செய்தவர்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கு 8,000 ரூபாய் மாதமாதம் கிடைத்ததை அடுத்து பலரும் அதிகப்படியான தொகையை முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே இதேபோன்று ’ஆருத்ரா கோல்ட் டிரேடிங்’ என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் மாதம் தருவதாகக்கூறி மோசடி செய்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, இதேபோன்று மோசடியில் ஈடுபடும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் மீதும் புகார்கள் எழுந்தன.

குறிப்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கிடைத்த ரகசியத்கவலின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தக்கூறி பொருளாதார குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார். தற்போது தமிழ்நாடு முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்திற்குத் தொடர்பான 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள தாமரை டெக் பார்க் கட்டடத்தில் செயல்படும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலும், மயிலாப்பூர், போரூர் உள்ளிட்ட 4 இடங்களில் அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று வேலூர் காட்பாடியிலிருக்கும் தலைமை அலுவலகம், அரக்கோணம், நெமிலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடக்கிறது. காட்பாடி வி.ஜி.ராவ் நகரிலிருக்கும் லட்சுமி நாராயணன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக பணத்தை முதலீடு செய்தவர்கள் புகார் அளிப்பதை தடுப்பதற்காக Whatsapp குழு அமைத்து பலருக்கும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் அண்ட் சர்வீஸ் உரிமையாளர் லட்சுமி நாராயணன் ஆடியோ வெளியிட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. சோதனையின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பேரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் பணம் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஐ.எப்.எஸ் நிதிநிறுவனத்திற்குச்சொந்தமான 21 இடங்களில் சோதனை!

இதையும் படிங்க:காஞ்சிபுரம் IFS நிதி நிறுவனத்தின் கிளை இயக்குநர் வீட்டிற்கு சீல்!

Last Updated : Aug 5, 2022, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details