தமிழ்நாடு

tamil nadu

200 சவரன் கேட்டு வரதட்சணை கொடுமை: மருத்துவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

By

Published : Oct 8, 2021, 1:20 PM IST

சென்னையில் 200 சவரன் வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்திய தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவருமான வினோத்குமார், அவரது குடும்பத்தினர் உள்பட எட்டு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

200-sovereign-gold-asking-dowry-in-chennai-8-were-booked
200 சவரன் நகைகள் கேட்டு வரதட்சணை கொடுமை- மருத்துவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

சென்னை:சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார். மருத்துவரான இவர், தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்துவருகிறார். இவருக்கும் கோவையைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் முடிந்து ஏழு மாதத்தில் இரட்டை குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் மோனிகா ஸ்ரீ மருத்துவரான தனது கணவர் மீதும், தனது கணவரின் குடும்பத்தினர் மீதும் வரதட்சணைப் புகார் அளித்திருந்தார். மோனிகா ஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள். பொறியியல் முடித்துவிட்டு ஐஏஎஸ் ஆக வேண்டும் என சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாதமியில் படித்துவந்தார்.

இதனிடையே மோனிகா ஸ்ரீக்கு அவரது பெற்றோர் திருமணத் தகவல் மூலம் மருத்துவரான வினோத்குமாரை திருமணம் செய்துவைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் இவர்களது திருமணம் நடப்பதற்கு முன்பே 200 சவரன் தங்க நகை போட வேண்டும் என மருத்துவர் வினோத்குமாரின் குடும்பத்தினர் வரதட்சணையாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

பெண் வீட்டார் கொடுத்த வாக்குறுதி

பெண் வீட்டாரோ தங்களிடம் உள்ள சொத்துகள் அனைத்தும் தங்களது மகளுக்குத்தான் எனவும், 120 சவரன் நகையை தற்போது போடுவதாகவும், பின்னர் 80 சவரன் நகை போடுவதாகவும் கூறி திருமணத்தை முடித்துவைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து சென்னைக்கு வந்தபிறகு மோனிகா ஸ்ரீயை அவரது கணவரும், கணவர் குடும்பத்தாரும் தொடர்ந்து துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வினோத் குமாரின் உறவினர்கள் தொடர்ச்சியாக மோனிகா ஸ்ரீயை தகாத சொற்களில் பேசி துன்புறுத்திவந்துள்ளனர்.

கருக்கலைப்பு

ஒரு கட்டத்தில் கருவுற்ற மோனிகா ஸ்ரீ தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, வினோத்குமார் வீட்டார், பெண் வீட்டாரைத் தொடர்புகொண்டு, உங்கள் பெண்ணிற்கு கருக்கலைப்புச் செய்துவிடுங்கள் 200 சவரன் நகையுடன் சொந்தமாக மருத்துவமனை கட்டித் தர நிறையே பேர் இருக்கிறார்கள் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு மோனிகா வீட்டார், ஒரே மகளின் வாழ்க்கை வீணாகிவிடும் என்றெண்ணி, 80 சவரன் நகைகளைத் தந்துவிடுவதாகக் கூறி சமாதானம் செய்துள்ளனர்.

சில மாதங்களில் மோனிகாவுக்கு கோவையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, வினோத்குமாரின் குடும்பத்தினர் குழந்தையை மட்டும் பார்த்துவிட்டு சென்னை திரும்பிவிட்டனர்.

ரூ. 1.5 கோடி, 200 சவரன் நகை கேட்டு மிரட்டல்

கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தைகளுடன் மோனிகா ஸ்ரீ கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதிருந்து மருத்துவமனை கட்ட 1.5 கோடி ரூபாயும், 80 சவரன் நகைகள் தந்தால் மட்டுமே வாழ முடியும் என வினோத்குமாரின் வீட்டார் மோனிகாவைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த மோனிகாவை முதன்மைத் தேர்வுக்கு தயராகக் கூடாது எனவும், வேலைக்குச் சென்றால் தன்னை மதிக்கமாட்டாய் எனக் கூறியும் வினோத்குமார் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையெல்லாம் தாங்கிக்கொண்டிருந்த மோனிகா ஸ்ரீ ஒரு கட்டத்தில் இது தொடர்பாக வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், வினோத்குமார், அவரது பெற்றோர், சித்தப்பா, மாமா என அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.

வினோத் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் எட்டு பேர் மீது வில்லிவாக்கம் மகளிர் காவல் துறையினர் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை - அதிகரிக்கும் மரணங்கள்

ABOUT THE AUTHOR

...view details