தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடப்பிரிவுகளில் 20 விழுக்காடு கூடுதலாக மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார்.

By

Published : Sep 10, 2020, 10:03 PM IST

government
government

தமிழ்நாட்டிலுள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. தமிழ்நாட்டிலுள்ள 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்காக ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 819 மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தனர். மாணவர்களின் சான்றிதழ்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் கல்லூரி வாரியாக மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

சிறப்புப் பிரிவினருக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று சேர்க்கை நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் விரும்பிய பாடங்களில் இருந்த இடங்கள் அனைத்தும் நிரம்பின. மேலும் விண்ணப்பித்த சில மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடத்தில் சேர ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்நிலையில், உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இருந்தும், நகரத்தில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் அரசு கல்லூரிகளில் அதிக அளவில் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி கற்க மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே மாணவர்களின் நலன் கருதி 20 விழுக்காடு கூடுதலாக இடம் வழங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.

கல்லூரி கல்வி இயக்குநரின் கடிதத்தினை பரிசீலித்து, 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டிற்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 20 விழுக்காடு கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 20 விழுக்காடு கூடுதலாகவும் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது. இந்தக் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அந்தக் கல்லூரியில் உள்ள பல்கலைக்கழகங்களின் அனுமதியை பெற வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details