சென்னை : 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் (செப். 30) முடிவடைகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிரவைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
தொடர்ந்து 100, 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளும் புதிய வர்ணங்களில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்த நிலையில், கடந்த மே மாதம் 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அதை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மேலும் நாளொன்றுக்கு நபர் ஒருவர் வங்கிகளில் 20 ஆயிரம் ரூபாய் வரையில் 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன், எந்த ஆவணங்களும் தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு முதலே புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது குறைக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டில் இருந்து பெருவாரியான நோட்டுகள் புழக்கத்தில் இருந்து மறையத் தொடங்கின.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, 3.32 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்று உள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் (செப். 30) முடிவடைகிறது. கால அவகாசம் நீடிக்கப்படுவது குறித்து ரிசர் வங்கி தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், மக்கள் மீதமுள்ள ரூபாய் நோட்டுகளை இன்றே மாற்றிக் கொள்வது ஆகச் சிறந்தது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக, கோயில் உண்டியல்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கலாம் என்ற நிலையில் தமிழகத்தின் பெருவாரியான கோயில்களில் சிறப்பு உண்டியல் திறப்புகள் மேற்கொள்ளப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. மேலும் பெரிவாரியான இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. பெட்ரோல் பங்க்குகள், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள், டாஸ்மாக், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், பேருந்துகள் என பல்வேறு இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
இதையும் படிங்க :ஆவின் பால் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கக் கூடாது - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு என்ன?