கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறாமல் உள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "முதலமைச்சர் தலைமையில் மூத்த அமைச்சர்கள், கல்வித்துறை செயலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இருந்தால் மட்டுமே, 11ஆம் வகுப்பு செல்லும்போது உரிய பாடம் எடுக்க முடியும் என்று ஆலோசிக்கப்பட்டது.
பல்வேறு தொழில் நிறுவனங்களின் தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி போன்ற அரசுத் தேர்வுகள் என அனைத்திற்கும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறது. எனவே 10ஆம் வகுப்பு தேர்வு அவசியம்" என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "ஊரடங்கிற்கு பின் 10ஆம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடைபெறும். மே 3ஆம் தேதிக்கு பின் தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும். மேலும், கரோனா பாதிப்பு இருப்பதால் மாணவர்களுக்கு பாதுக்காப்புடன் தேர்வு நடத்தப்படும் என்றும், சமூக இடைவெளிவிட்டு தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 20 கோடி ரூபாய் செலவில் புற்றுநோயை குணமாக்கும் கருவிகள்! - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி