தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2020, 8:25 PM IST

ETV Bharat / state

ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அலுவலர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செங்கல்பட்டு: ஊராட்சியில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரையடுத்து ஆய்வு செய்ய வந்த அலுவலர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திலுள்ள எல்.என்.புரம் ஊராட்சியில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்தது.

ஊராட்சி செயலர் சிவக்குமார், பசுமை வீடு திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடு செய்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்விளக்கு போன்றவைகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் என ஊராட்சி நிர்வாகத்தின் மீது புகார் பட்டியல்கள் நீண்டன.

இதுகுறித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குப் புகார்கள் அனுப்பப்பட்டன. அதனடிப்படையில், ஊராட்சி கணக்கு வழக்குகளையும், செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் ஜான் லுாயிஸ் உத்தரவிட்டார்.

எனவே, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் கிருஷ்ணன் உள்ளிட்டோர், எல்.என்.புரம் ஊராட்சிக்கு இன்று வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஊராட்சி செயலரை உடனே பணியிடை நீக்கம் செய்யக்கோரி, கிராம மக்கள் அவர்களது வாகனங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அலுவலர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் கூறியதைத் தொடர்ந்து முற்றுகையைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் சிறுமி தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details