1991ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அலுவலரான ரவி, சைபர் பாரன்சிக் மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவில் முதுகலைப் பட்டம் பயின்றவர். அதோடு மதுரை வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மூலம் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் ஏ.எஸ்.பியாக பணி தொடக்கம்:தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஏ.எஸ்.பியாக தனது பணியைத் தொடங்கிய ரவி, ஓசூர் ஏ.எஸ்.பியாக பணியாற்றியபோது அங்கு நடைபெற்ற குற்றச்செயல்கள் பலவற்றை தடுத்து நிறுத்தி பலரின் பாராட்டைப்பெற்றார். பின்னர் பிரிக்கப்படாத நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றியபோது பரபரப்பான தங்கம் முத்து கிருஷ்ணன் கொலை வழக்கு குற்றவாளிகளை திறம்பட விசாரித்து கண்டறிந்ததோடு, நிகழவிருந்த பெரும் சாதிக் கலவரத்தை தடுத்த பெருமை இவருக்கு உண்டு.
பூந்தோட்டம் அமைத்து சாதிக் கலவரம் தடுப்பு:அதேபோல, விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய போது சாதிக் கலவரத்தைத்தூண்டும் வகையில், திண்டிவனத்தில் நடந்த அம்பேத்கர் சிலை சிதைப்பு செயலை திறம்பட கையாண்டு, சிலையைச் சுற்றி பூந்தோட்டம் அமைத்து, பொது அமைதியை நிலை நாட்டினார். மேலும் 10 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த ரவுடி ஒருவனை உளவுப் பிரிவு மூலம் கைது செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், சிங்கப்பூர் சென்று அங்குள்ள காவல் துறையின் விசாரணை முறைகளைக் கற்று, அதை விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் நடைமுறைப்படுத்தினார்.
ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் முறையை திறம்பட நடைமுறைப்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் தன்னார்வலர்களை இணைத்தார்.
பின் சென்னை மாநகரப் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இவர் பணியாற்றிய போது மேம்பாட்டுத் திட்டங்களாக விளங்கும் இ-செல்லான் முறை மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கென முகநூல் பக்கம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுதினார். தனது திறமையான விசாரணை மூலம் மேட்ரிமோனி மோசடியில் பல பெண்களை ஏமாற்றிய லியாகத் அலி கானை கைது செய்தார்.
காவலர் நமது சேவகர்: சென்னை காவல் துறையின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு "காவலர் நமது சேவகர்" என்ற தலைப்பில் குறும்படத்தை எழுதி, தயாரித்து நடிக்கவும் செய்தார்.