தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் ஆணையத்தை கண்டித்து விசிக அறிக்கை!

சென்னை: வருமானவரி சோதனை என்ற பெயரில் துப்பாக்கிச் சூடு நடத்துவது, கட்சியினரை துன்புறுத்துவது போன்ற தவறான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் கையாளுவதாக விசிக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

By

Published : Apr 17, 2019, 5:24 PM IST

Updated : Apr 17, 2019, 5:29 PM IST

திருமாவளவன்

இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமானவரித் துறை சோதனையை ஏவியும், ஆண்டிபட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் ஆளும் அதிமுகவினர் நடத்திவரும் ஜனநாயகப் படுகொலைக்குத் தேர்தல் ஆணையம் துணைபோவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்கான தொகையை வருமானவரித் துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன. ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை. இது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித் துறையை ஏவி சோதனை நடத்தியுள்ளனர். அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடவேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி நடத்திய அராஜகம் இது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது ஆளும் அதிமுக தோல்வி பயத்தில் எந்த வன்முறையையும் ஏவும் என்பதற்கு உதாரணமாகும்.

துணை முதலமைச்சரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்குப் பணம் கொடுக்கும் காணொளி வெளியாகியிருக்கிறது. முதலமைச்சரே பணம் கொடுக்கும் காணொளியும் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்குப் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் பல இடங்களில் அதிமுகவினரிடம் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்புத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

பாஜக - அதிமுக கூட்டணி நடத்திவரும் ஜனநாயகப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Last Updated : Apr 17, 2019, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details